முடிந்தது தேர்தல் கூத்து!
மும்முர மாக எண்ணி
விடிந்ததும் அநேக மாக
விடை…”வென்றார் இவர்தான்” என்று
பட படப்போடு செய்தி
பரவிடும்! வென்றோன் நாமம்
வெடிகளால் அதிரும்! வீழ்ந்தோன்
மீசை… மண் உதிர வேகும்!
எத்தனை கோடி கொட்டி
எடுத்த காவடி? நம் மக்கள்
புத்தியால் நாட்டை மீட்கப்
பொருதிய போட்டி; வாயால்
கெத்துகள் விட்டோர்க் கெல்லாம்
கீதை போல் பதில்கள் சொல்லி
நெத்திக்கு நேரே ஞானம்
நிரூபிக்கும் தேர்தல் ‘போதி’!
ஐம்பது வீதத்தின் மேல்
அரும்பொட்டால் வென்றோர் துள்ள
ஐம்பது வீதத்தின் கீழ்
ஆணையைப் பெற்றோர்…தாங்கள்
நம்பிய கொள்கை தோற்ற
நட்டத்தைச் சுமப்பார்! காண்பீர்…
கம்பீர மக்கள் ஆட்சி;
கவலை…பாதிப்பேர் கொள்வார்!
வேட்பாளர் வென்றார் தோற்றார்
வெற்றிதோ ல்விகளுக் குள்ளே…
வேட்பாளர் வெல்லத் தோற்க
விரலில் மை பூசி வாக்கு
போட்டவர் வென்று தோற்றுப்
பொருளிழந்திடக் கூடாதாம்…
‘மீட்பர்கள்’ உணர்ந்தால்…மக்கள்
ஆட்சியின் மகிமை மேலாம் !