காலாதி காலமாய் கடவுளுக் கஞ்சியே
காய்த்தது எங்கள் வாழ்வு.
கற்பென்றும் மானமே கண்ணென்றும் நீதிமுன்
கைகட்டிற் றெங்கள் ஆழ்வு.
வேல்கொண்டு வாள்கொண்டு வென்று நிமிர்ந்தாலும்
மிக்க பண்பாடு கண்டு
விழுமியம் காத்தது விதியை மதித்தது
மேன்மை நூல் கற்று நின்று.
வாழ்விலே நேர்த்தியும் வரலாற்றில் கீர்த்தியும்
வாழ்முறை கூர்ப்பும் கொண்டு
மண்ணிலே நூறாண்டு மாண்போ டுயிர்த்தது
வையம் வியக்க அன்று.
காலங்கள் மாறிற்று கோலங்கள் மாறிற்று
கடன் ‘மேற்கில்’ நித்தம் பெற்று
கைவிட்டு… வாழ்க்கையை மாண்பினை ஆயுளை
கருகுது புதுமை என்று!.
தொற்றாத நோய்களும் தொந்தியும் சள்ளையும்
தூக்க முடியாத உடலும்
தொன்மை பெருமையைத் தூற்றி விசங்களை
சுவறிடச் செய்யும் உணவும்
பெற்றோரைக் காக்காது பெரியோர்சொல் கேட்காது
பிழைசெய்யும் போலி மனமும்
பீடற்ற கல்வியும் பிணிதேடும் வேலையும்
பிடிப்பற்ற பாசம் உறவும்
கற்பனை வாழ்க்கையும் கனவில் தொலைவதும்
கலை வளர்க்காத திருவும்
கருணை இலாச்சுய நலமதும் ஊர்கூடி
கைகோர்த் திடாத மறமும்
அற்புதங்கள் என்றெம் அயலிலும் வாழ்விலும்
ஆனது இந்த தினமே!
அழிவின் விளிம்பிலே சுயமும் தொலைத்து
அலையு திழிந்தெம் இனமே!