எட்டய புரத்தில் அன்று
எழுந்த தீக் குஞ்சு …இன்று
தொட்டு அடிமுடிகள் காணா
சுடர்ப் பிழம்பாகி …எங்கள்
பட்டிகள் தொட்டி எங்கும்
பரவியே சமூகக் குப்பை
முற்றாக எரித்து என்றும்
முளாசுது தொடர்ந்து வென்று.
பாரதி வளர்த்த ஞானப்
பாட்டுத்தீ ..தமிழின் .நீண்ட
பா வரலாற்றில் என்றும்
பகலவன் சுடர்போல் ஓங்கும்!
பா மரபுக்கும் இன்றைப்
பல் நவீனங்க ளிற்கும்
பாலமாய் அவன் பா நிற்கும்.
பாடங்கள் நிதம் கற்பிக்கும்!
பாரதி எங்கள் பாட்டின்
பாட்டன்…பா ரதத்துக் கான
சாரதி! சரிதச் சேற்றில்
தாண்ட பாத் தேரை மீட்டு
ஊரூராய் இழுத்து வந்தான்!
உலகமும் வணங்க வைத்தான்!
போராடும் சமூக நீதிப்
புரட்சிக்கும் தேரைத் தந்தான்!
நீண்ட தொல் வரலா றுள்ள
நிறைந்த நற் தமிழ்ப்பா கற்க
வேண்டுமாம் நெடிய காலம்.
விருப்புடன் குறைந்த பட்சம்
பாரதி பாட்டைக் கற்றால்
பலன் முழுத் தமிழ்ப்பா கற்ற
மாதிரி ஆகும்! அன்னான்
யுகசந்தி…பயின்று உய்வோம்!
பாரதி உரைத்த வேதம்
பாரதி பகன்ற ஞானம்
பாரதி வளர்த்த வீரம்
படிப்பித்த சமூக மாற்றம்
பாரதி இரசித்த காதல்
பாரதி நினைத்த வாழ்க்கை
ஓர்தினம் தோன்றும்! அன்னான்
உயிர்க் கனா நனவாய் மாறும்!