அமைதியாகத் தானே அன்றுவரை யான் இருந்தேன்!
அமைதிச் சொரூபமாயும்
அள்ளி அள்ளி வளமெல்லாம்
அட்சய பாத்திரமாய் அனுதினமும்
யான் அருள
உட்கொண்டீர்…நானும் ஓயா துதவிசெய்தேன்!
அன்னாய் என வந்தீர்
அமுது நிதம் ஊட்டிவிட்டேன்!
என்மீது கரிசனைகள் ஏதுமற்று
உமக்கேற்ப
எத்தனையோ கலன்களினை
எனுள் இறக்கி எனைக்கலக்கி,
எத்தனை வழிச்சல் கரைவலையைப் பரப்பி
நித்தமும் அடியாழம் வரைவழித்து
சமநிலையை
அழித்தேகி,
என்னை வெறும் குப்பையிடும்
தொட்டியாக்கி,
அழகு குடியிருந்த அக வாழ்க்கைச் சூழலினை
குழப்பி,
உங்கள் குலம்காக்க எனைவருத்தி,
அணுகுண்டுச் சோதனைகள் நிகழ்த்தி,
அசேதனங்கள்
கணக்கு வழக்கற்றுக் கலக்கி,
என் ஆன்மாவைத்
திணறவைத்தீர்!
எந்தன் சீற்றத்தை வேதனையை
உணர்த்த
என்னை உங்களிடம் இருந்து காக்க
மேலும் பொறுக்காது
விரலைமட்டும் அன்று ஆட்டிப்
பார்த்தேன்;
நீர் தொடர்ந்தும் பாவந்தான் செய்கின்றீர்!
பாவியெனை வதைக்கின்றீர்!
என்னோடு இணங்கிவந்தால்
ஆசி தருவேன்;
இன்றன்று உமை அழித்ததினம்
யோசிப்பீர் …
இனியும் அடக்கவந்தால் யான் பொறுக்கேன்!
வாழிய நீர்
இப்படிக்கு
உமை மறவாக்
கடல் அன்னை.