அப்படி என்ன அகோரப் பசி தீக்கு?
எப்படி மூண்டதென
எம்மூளை தேறு முன்னே…
ஐம்பது கோடி ஐந்தறிவு சீவன்களை
வெம்மையுள் வீழ்த்தி
உலகின் பெரும் ‘வேள்விக்
குண்டமெனப்’ பெருங்காட்டைக்
கூண்டோடு கொளுத்தி
தன்பசியைப் போக்கிற்று!
சாக் கொலைப் பட்டினியாய்
நின்று ‘அமேசான்’ காட்டில்
பாதிப் பசி தணித்து;
இன்றைக்கு ‘கங்காரு’ தேசத்திலே
மிகுதிப்
பசியினைத் தீர்த்து;
பஸ்பமாக்கி;
தணலு(ம்) கண்ணீர்
கசியப் பரவிடுது!
மிருக நேயம் கருகிடுது!
பற்றிப் படர்தீயில்
பாய்ந்தகல ஏலாத
‘அற்புதங்கள்’ அப்படியே
அனற் சமாதி யாகிவிட,
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அடக்கிவைத்த
பேய்ப்பசியை வாயில்லாப்
பிராணிகளிற் காட்டிடுது!
ஊன் உருகி விலங்குடலால்
நெய்பெருக
அதைப் பருகி
வான் முகில்களை நக்கி
வளர்ந்தது அனற் பிழம்பு!
நெருப்புக்கு இதயமில்லை;
அதன் நெஞ்சில் ஈரமில்லை;
பெரும் பசி வயிற்றோடும்,
பேய் நாக்கு, வாயோடும்,
மூசும் அனற் கோப மூச்சோடும்,
காற்றிலேறிப்
போகும் தீ …
‘புவியின் நுரையீரற் காடுகளை’
வேகமாய்ப் பரவும்
புற்றுநோயாய்ச் சாய்க்கிறது!
தேசங்கள் மூச்சுமுட்டித்
திக்குமுக்காடும் தேய்ந்து!