நாப்பாம்பு

ஒவ்வொரு நாக்குகளும்
உருவில் அசைந்திடையில்
ஒவ்வொரு வகைப்பாம்பாய்
உவமிக்கும் என்மனது!
பாம்புகளில் உண்டு பல்வகைமை
நாக்குகளாம்
பாம்புகளிலும் உண்டு பல்வகைமை
சொல்லில் விசம்
ஊறியே தீண்டினால்
உயிரெடுக்கும் நாப்பாம்பு,
வார்த்தைகளால் வளைத்து
சிக்கியோன் மூச்சுவிடக்
கூட விடாது சுற்றி
இறுக்கி வீழ்த்தும் நாப்பாம்பு,
வல்லமை இலாப்பாவ வகைஉயிரை
பாய்ந்து கௌவி
மெல்லமெல்ல விழுங்குகிற நாப்பாம்பு,
முழுதாய்ச்
சீறிக் கடிக்காமல் திரும்பியோடும்
நாப்பாம்பு,
தீண்டி உயிர் எடுக்காமல்
நடுக்கமும் மயக்கமும்
ஏற்படுத்தும் நாப்பாம்பு,
இப்படியாய் என்முன்னே…
ஒவ்வொரு நாக்குகளும் உருவில்
அசைந்திடையில்
ஒவ்வொரு வகைப்பாம்பாய் உவமிக்கும்
என்மனது!
உன் நாக்கு எப்பாம்பு வகை…என்று
யானறிவேன்!
என் நாக்கு எப்பாம்பு வகை…என்று
நானுணர்வேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply