எப்படித்தான் சாத்தியம் என்றெவரும் பார்த்தோம்!
எடுத்த அடி வைக்குமுன்னர் புதிதாய் வேறு
செப்புதற்கு அரிய, நிஜப் புரட்சி யான
‘செயல் – வடிவம்’ பெறுவதனை மலைத்துக் கண்டோம்!
அப்படியோர் மகிமை…இன்றுலகம் போற்றும்
‘ஆறு திரு முருகனது’ தமிழ் சைவம் சேர்
ஒப்பரிய சாம்ராஜ்ய எல்லை நீளும்!
உயர் தெய்வ ஆசியொடன் னார் பேர் வாழும்!
யாழ்ப்பாணம் ‘சிவபூமி’ என்று சும்மா
யாம் மகிழ்ந்த காலம் போய் …மெய்யாய் எங்கள்
யாழ்ப்பாணம் ‘சிவபூமி’ என்றா தாரம்
யார்க்கும் பல உரைக்கும் ‘திரு முருகர்’ செய்யும்
காரியங்கள் அதிசயம் காண்! முதியோர் இல்லம்,
மனம் நலிந்த சேய்கள் கற்கப் பள்ளிக் கூடம்,
மா ‘திரு வாசகத்துக்’ கெழிற் கற் கோவில்,
வந்த தரும் பொருட் காட்சி யகமும்…யாழில்!
எத்தனையோ ஆண்டின்முன் ‘முருகர்’ கண்ட
எழிற்கனவு; யுத்தப்பேய் சப்பித் துப்பி
சத்திழந்த ‘யாழ் கனியின்’ மிஞ்சும் சாற்றை
தன் கரத்தால் பாகுசேர்த்துக் காத்தார் இன்று!
செத்தொழிந்து அடையாளம் தனித்துவங்கள்
சிதைந்த…எம் மரபுரிமைச் சொத்தைக் காத்து
இத்தினம் தன ‘அரண்மனைக்கு’ முன்பு கோட்டை
எழுப்பினார்…ஓர் நாட்டரசு(சன்) செய்தாற் போன்று!
பன்னிரெண்டு பரப்பில் மூன்று மாடி ஓங்கும்!
பாதைதனை சங்கிலியன் ,எல்லாளன், யாழ்
மன்னர் இருபத்தொருவர் சிலைகள் காக்கும்!
மண்ணின் அரும் பொருட்கள் முதல் மாடி சேரும்!
ரெண்டாவது தளத்தில் ஈழச் சான்றோர்
சிறப்பெல்லாம் ஒளிப்படமாய் உயிர்த்து வாழும் !
வண்ண மரபோவியங்கள் பலவும் மூன்றாம்
மாடி ஆழும்; காணக் கண் கோடி வேணும்!
பிரமாண்டம், வியப்பூட்டும் பெரிய மாடம்,
பிரமிக்க வைக்கும் கடிகாரம், கூடம்,
அருணனினைச் சுற்றி நவக் கிரகம் நீருள்
ஆடுகிற அதிசயம், முன் கோட்டை வாசல்
உருச்சிலை நம் தொன்மையை தண்டோராப் போடும்!
உலகின் ஏழு அதிசயம் போல் …யாழில் கண்முன்
உருவான அதிசயமாம்! ‘செஞ்சொற் செல்வர்’
உழைப்பிலெழும்…புதியதொரு வரலா றின் றாம்!
இராஜராஜ சோழன் அதைக் கட்டி வைத்தான்.
இந்த மன்னன் இக்குளத்தை வெட்டி வைத்தான்.
பராமரித்தான் தமிழை அவன்; சைவம் தன்னை
பார்த்தணைத்தான் இவன்; என்று கதைகள் பேசித்
திரிந்தவர் நாம்…’பூதங்கள்’ கட்டிற் றென்றும்
செப்பியோர்தாம்! ‘ஆறு திருமுருகன்’ இந்தப்
பெரும் பணியைக் கண்முன்னே செய்து காட்ட
பேச்சிழந்தோம்…நெஞ்சார வாழ்த்து கின்றோம்!