மறம்

அம்பு, வில், வேல், ஈட்டி,
அதன்பின் வாள், துப்பாக்கி,
குண்டுகள், விச வாயு, ஏவுகணை, அணுகுண்டு,
என்று பரிணாம வளர்ச்சி பெற்றுக்
கூர்ப்படைந்த
ஆயுதங்கள்….
இன்று அடுத்த படி தாண்டி
மானுடம் முழுதையும்
மண்ணுள் புதைக்கவல்ல
உயிரியல் ஆயுதங்கள் ஆகி
உரு மாறி வந்து
மயிரைப் பிடுங்கும் நொடிமணித் துளியுள்ளே
இலட்சோப இலட்சம்
உயிர்களை இரையாக்கும்!
நிலம், காற்று, வானின் ,
நீரினதும் உயிர் பறிக்கும்!
வல்லரசர் நாமென்று மார்தட்டும்
பாதகரின்
சல்லிக் குடுவைக்குள்
சத்தமின்றி நோய்க்கிருமி
பள்ளிகொள்ளும்;
சிலதே கசிந்து பரவினாலும்
உள்ளே எது நடக்கு தென்றுணரும் முன்
மண்ணில்
யார் எவர்கள் என்று பார்க்காமல்
உயிரழிக்கும்!
முகமூடிக் கவசங்கள் மூச்சை
எத்தனை நாள் காக்கும்?
பகலிரவு பாராமல் பாழ்க் கிருமி
பாய்ந்து தாக்கும்!
“யாருக்கோ” என்றாய்ந்து வைத்தவை
தமக்கு எமன்
ஆகுமென யார்நினைத்தார்?
அழிவை எவர் உணர்ந்தார்?
வினையை விதைத்தவர்கள்
விளைந்துஇன்று வரும் கொடிய ..
வினையை அறுக்கின்றார்!
விஞ்சுபுவிப் பசி தணிக்கத்
தினை விதைக்கத் தெரியாத திக்கரசர்
வரலாற்றின்
கனவுகளை நனவிலின்று கருக்கி
எரிக்கின்றார்!

31.01.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply