எத்தனை எத்தனை தத்துவம் கண்டனர்!
எத்தனை சத்திய வேதம் பயின்றனர்!
எத்தனை நீதிநூல் கற்றுத் தெளிந்தனர்?
எத்தனை மார்க்க உபதேசம் பெற்றனர்?
முத்தி வழி, வகை, மூலம், உணர்ந்தனர்.
மூத்த பலர் சொல் அனுபவம் தேர்ந்தனர்.
அத்தனை பெற்றும் என்னாயினர்? இன்றைக்கும்
அற்ப இன மத வாதத்தால் வீழ்கிறார்!
எத்தனை கற்றுத் தெளிந்தவர் ஆயினும்,
எத்தனை ஞானம் உணர்ந்தவர் ஆயினும்,
எத்தனை நீதிகள், வேதம் பயின்றுமே
எத்தனை உண்மை அறிந்தவர் ஆயினும்,
கத்தியைத் தீட்டல் போல் இன மத வாதத்தை
காரணத் தோடுமே காரிய காரர்கள்
புத்தியைப் பாவித்துத் தீட்டியே தூண்டிட
புரண்டு அவர் பக்கமே புள்ளடி போடுறார்!
இன மத வாதங்கள் இருக்கும் வரையிலும்
இங்கு மொழி குல சமூக பேதம் இன்னும்
மனங்களில் உயிர்ப்புடன் வாழ்ந்திடும் மட்டிலும்
மலரும் முகம்….பகை மூட்டும் உளம்! பெரும்
கனவு , இலட்சியம், நனவு எலாம் …இந்த
கழிசடைத் தனங்களால் நொந்து நூலாகிடும்!
உனது உணர்வை உசுப்பி அறிவினை
உடைப்போரின் திட்டமே….வாகைகள் சூடுதாம்!