பழி

ஆழ்ந்து உறங்கும் கிராமத்தை
அயல் வெள்ளம்
பாய்ந்து அடித்துப் பலிவாங்கிச் செல்வதுபோல்,
சாவென்னும் பாம்பு கெளவியே
இழுத்தோட
மாயும் தவளையைப்போல்,
பாம்பு வெளவால் பூச்சிகளில்
வாழ்ந்திருந்த வைரஸ் மனிதரிலே தொற்றி
ஊர்தாண்டி நாடு உலகமென
சாப்போர்வை
விரித்து சீவன்களை
விழுங்கிக்கொண் டிருப்பதனால்
மரணபயம் …
பாம்பை உண்டவனைக் கண்டாலோ…
இருமினாலோ தும்மினாலோ
எண் திக்கை உலுக்கிடுது!
ஊர்வன, நீந்திப் பறந்து, நடந்து, உயிர்
வாழும் அனைத்தினிலும்
வாய் வைத்தோர் செய்த பழி
பாவத்தை இன்று முழுப் பாரும்
அனுபவிக்க
நோய்தொற்றி நொந்தவரைக்
கருணைக் கொலைசெய்தும்
தாம் தப்ப இன்றித் தரணி தயாராச்சு!
உணவு முறை, வழக்கம்,
உணவினிலே பாதுகாப்பு-
நினைத்தறியா …
நேற்றை நிஜத்தவறால்
வைரஸ் வெள்ளம்
அடித்துக் கொண்டோடிடுது அரும் உயிரை !
இவ்வழிவைத்
தடுக்கவழி தெரியாமல்
அறிவு தடுமாறிடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply