சகுனிகளே அதிகமாக வாழும் காலம்.
தருமமொடு சத்தியத்தைத் தனியே நம்பி
அகம் புறத்தில் தருமர்களாய் வாழ்ந்தால் மட்டும்
ஆகாது; முள்ளை முள்ளாலே கொய்யும்
வகையினிலே….புறத்தோற்றத் தருமர் கூட
மனதினுள்ளே சகுனிகளாய் மாற வேண்டும்!
மிகப்பெரிய வாழ்க்கைப்போர் நடக்கும் இந்த
மேதினியின் தீயைத் தீயால் அணைக்க வேண்டும்!
வாழ்வதுவே பெரும்போட்டி…வையம் தன்னில்
வாழ இடம், உணவு, காற்று, சோடி, சொத்து,
தேடி அதை அடைதல் பெரும் போட்டி…இந்தத்
தீவிரமாம் போட்டிகளில் தினமும் மோதி
வாழ வல்லவை வாழும்; வலிமை அற்ற
மனம் உடலும் வீழ்ந்துபோகும்; இவைக்குள் உச்சி
வாழ்வை ஜெயிக்க இங்கு சகுனி யாயும்
வாழவேணும் தருமர்….இதே கலியின் கோலம்!
21.02.2020