அச்சம் ஆளும் நாட்கள்

எப்படித்தான் இந்தத் துன்பம் எங்களையும் சூழ்ந்தது?
ஏழு கடல் தாண்டி இன்றெம் ஊரும் தீப்பிடிக்குது.
இப்ப எட்டுத் திக்கும் இந்த நோயில் வெந்து சாகுது,
எம்மூர் வெப்பம் எம்மைக் காக்கும் என்றம்; ஏன் பிழைக்குது?

அன்னியச் செலாவணியை அள்ளித்தந்த பயணிகள்,
அருகிருந்து நாம்வியக்க அருவருப்பாய் பார்த்தவர்,
இன்று நோயைக் காவிக்கொண்டு வந்து இங்கொளிந்தனர்
எங்களுக்கு இலவசமாய் தும்மி வைரஸ் தந்தனர்.

எட்டுத் திக்கும் தொற்றுமட்டும் எங்கள் வான வாசலில்
இல்லை காவல்; வந்தவர்கள் தந்தரெங்கள் ஊர்களில்.
பட்டு நொந்து பாடசாலை லீவு விட்டு ஓய்ந்தது.
பரீட்சை, ரியூசன், விடுதி, பூங்கா, மூட அச்சம் ஆளுது!

மண்ணில் நீரில் வாழும் யாவும் உண்டு உற்ற துன்பமோ?
வறுத்தும் பொரித்தும் அவித்தும் ருசி தேடிப் பெற்ற பாவமோ?
உண்மை யார் உரைப்பர்…உயிர் ஆயுதத்தின் ஆட்டமோ?
உலகம் முக மூடி போட வைத்த தாரின் திட்டமோ?

நாடுகளின் தலைவர், மனைவி, மந்திரிமார் சிக்கினார்.
நல்ல விளையாட்டு வீரர், நடிகர், நோய்க்குள் நிற்கிறார்.
நாளும் தொற்றின், சாவின், எண் உயர்ந்து அச்சம் ஊட்டுது,
நமது நாடும் தப்பலை; இக் கோடை நடுங்க வைக்குது.

கூட்டம் சேர்ந்திடாது வீட்டில் நின்று நேர்த்தி வைப்பமோ?
குளித்து, கை கழுவி, பொத்தி தும்மி, ஊரைக் காப்பமோ?
ஏற்று…தொற்றியோரை தனிமைப் படுத்தி அவரை மீட்பமோ?
எமது வாழ்க்கை முறை பொருத்தம்….உலகுக் கதை உரைப்பமோ?

16.03.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply