தொட்டு ஸ்பரிசித்து சுகமளித்து தீட்சைதந்து
முட்டறுத்து மோட்சம் அருளும்
முறை கதை போய்
தொட்டாலே…’மோட்சம்’ தொடும் அச்சம் சூழ்ந்து
சற்று
எட்ட இருந்து இறப்பைத் துரத்துகிற
திட்டத்தில் கவனமாக
எல்லோரும் சிறைப்பட்டார்!
இருமினால் தும்மினால்
எட்டடிக்கு ஓடியவர்
அருகில் உயிர்க் காதலியும்
அணுக அலறுகிறார்!
தொட்டதெல்லாம் பொன்னாகித் – தந்த
துயரஅன்று,
தொட்டருகில் பிறர் வந்தால்
துயர் சூழ்ந்து கொல்லுதின்று !
தொற்றியவர் போன இடம், தொட்டவைகள்,
தொற்றுண்டோர்,
பற்றிப் புலனாய்ந்து
பாவிகளைப் புனிதமாக்கும்
புதியதொரு சுவிசேஷம்
பொது மருந்தோ டலைகிறது!
மதியறியா வழிகளிலும் மர்ம நோய்
வருகிறது!
நானும், நீ, அவனும், யாரும், எவருமிங்கு
நோய்க்காவியாய்,
நோயாய்
நொடியில்மாறும் யதார்த்தத்தில்
தாய்தந்தை பிள்ளைகுட்டி
சகோதரம் உறவென்று
யாரெவரையும் நம்ப முடியா
நிலைசூழ்ந்து
‘நாலடி’ இடைவெளியில்
நம்முறவு தொலைந்துளது!
யாரெவரும் தனித்தவர் தாம்
தாம் தாம் தமைக்காக்க
வேணுமெனும் சுயநலமும் வீடுகளில்
நுழைகிறது!
ஊரடங்கை, சாவை, உயிர்ப்பயத்தை,
கண்டவர்தான்
நாமும்;
இன்று மிக அருகினிலே
உருவமற்றுக்
காண முடியாக் கிருமியாக
சா.., சாவின்
தூதர் தொடர துணிந்தறிய
மனம், கருவி
ஏதுமின்றி யாரி(வி)னிலும்
எமனைத் தரிசித்து
ஒதுங்கிடுது மனது!
போர்க்காலம் போல் அன்றி
உதைக்கும் நோய் எங்கும்….உயிப்பயத்தில்
முழு உலகும்….
விதிர்விதிர்த்து, ‘அரூப எதிரியுடன்’
போர்புரிந்து,
அதிபுத்தி சாலிகளாய் அளக்கும்
நிலை மறந்து,
விதியை நொந்து,
முதல்முதலாய்
வெருண்டு கிடக்குதின்று!
21.03.2020