எங்கே இதுவரை இருந்து
திடீரென்று
எங்கும் பரவி இறக்கவைத்த திக் கிருமி?
இன்றா இது தோன்றிற்று?
‘என்றைக்கோ தோன்றி…ஓர்
சின்னஞ் சிறுசீசாச் சிறைப்பட்டு
அதுதிறக்கப்
பாய்ந்து வெளிவந்து பரவுமொரு’
பூதம்போல்
வாய்திறந்தெம் முற்ற வாசலுக்கும் வந்ததின்று!
யாரெவரும் காணா அளவுச்
சிறுகிருமி;
யாரும் கணக்கெடுக்கா
அளவுப் பதர்க்கிருமி;
தீண்டத் தழுவி தும்மத்
திசையெங்கும்
ஒட்டிற்று!
யாரும் எதும் உணரா நுண் கணத்தில்
சட்டென்று தொற்றித் தன்
‘வெறித்தனத்தைக்’ காட்டிடுது !
இப்படி எத்தனை கிருமிகள் இருக்கிறதோ?
இப்படி இன்னுமென்ன நோயை
இவை தந்திடுமோ?
இருந்தாற்போல் சோர வைத்து ;
இருமித் தலைசுற்றி
இரத்தவாந்தி யோடு இரத்தம் கக்கி
என்ன
நடந்ததெனத் தேறு முன்னர்
நரர் கதையை முடித்திடுமோ?
எத்தனை இதுபோன்ற இரகசியக் கிருமிகள்
எந்த விலங்குகளில் வாழ்கிறதோ?
இதுபோல
கண்ணுக்குத் தெரியாது… இருமி,
இரத்தம் கக்கவைத்து,
என்ன நடந்ததென்று தேறு முன்னர்
மனிதர்களைத்
தின்னும் இக் கிருமிகளைத் தான்
அறியா…நம் முன்னோர்
பேய்கள் சாத்தான்கள் பிசாசுகள்
இரத்தக்
காட்டேறிகள் என்று
கற்பனையில் கண்டனரோ?
‘இவற்றை’ அறிந்தவர்கள்
இவற்றை எங்கோ பிடித்து…ஒளித்து
கவனமாகக் காத்து
தமது பகைவரின் மேல்
பேய்களென ஏவி…
புதிய யுத்த முறைமை ஒன்றை
ஏற்படுத்தி விட்டாரோ
எவர் அறிவார் பராபரமே!
17.03.2020