விண்ணிலும் மண்ணிலும் விரிந்த கடல்களிலும்
நின்ற கபாட நெடுங் கதவம்
எல்லாமும்
ஒவ்வொன்றாய் மூடப் பட
முகத்தைத் தத்தமது
ஒவ்வொரு எல்லைகளின் உள்ளும்
வளை எலிகள்
போல் ஒளித்துப் பதுங்கி
ஒடுங்கினர் பொதுசனங்கள்!
எள் விழ இடமற்று இருந்து;
வண்ண விளக்குகளால்
கொள்ளை அழகுடுத்து; குளிர்ந்த
சாலை இடுக்கெல்லாம்
தொற்றிற்றுக் கிருமி என்ற
யதார்த்தம் இன்றே
சற்றுப் புரிய ….சாவு நிதம் அறுநூறு
எழுநூறு என்றொவ்வோர் திசையும்
விழுகிறது!
அழகும், கலை வெறியும், ஆடம்பரமும்
ஆளும்
சொர்க்க புரிகள்
இப்படி நரகமான
மர்மத்தை யார்தான் மனதில்
முன் நினைத்திருந்தார்?
இப்படியோர் துயர இறுதி மரண நொடி
எப்போதும் யார்க்கும்
இனி வாய்க்கக் கூடாது
என்கின்ற வேண்டுதல்கள்
எழுகிறது எண் திசையும்!
துன்பத் தனிமையிலே…..
துணையற் றிறந்தவரைக்
கண்கொண்டு பாராது; கவசமிட்ட பேழைகளை
காற்றுப் புகாதடைத்து;
காத தூரத்திலே நின்று;
பார்த்ததுமே அஞ்சலித்துப் பிரார்த்திக்க
நேரமற்று;
புதைக்க இடமுமற்று;
வேண்டாப் பொருட்கள்… ஆக
விதி சபித்ததேன் என்று
விளங்கவில்லை எங்களுக்கு!
வளர்ச்சியின் எல்லையிலே …வளங்களை
மிதமிஞ்சி
அளைந்து அனுபவித்து,
ஆரோக்யம் தனிலுயர்ந்து,
எல்லாச் சுகங்களையும் இடையறாது பெற்று,
“வாழ்வின்
எல்லைகண்டோம்” என்று இறுமார்ந்தோர்….
இன்றைக்கு
கையா லாகாமல் கண்ணீர் உகுக்கின்ற
மெய் நிலைமை வந்ததில்….
எதை உணர்ந்த திவ் உலகு?
29.03.2020