அநாதையாச்சு வானம். அநாதையாச்சு முகில்கள்.
அநாதையாச்சு காற்று.
அநாதையாச்சு வெய்யில்.
அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும்.
அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும்.
தனிமைப் படுத்தல் …சுய
தனிமைப் படுத்தலென
மனிதர்… சகமனிதர் உடன் தானும் சகஜமாக
உரையாடக் கூட உதவாதோர்
எனப் பழித்துக்
கொரோனா சபிக்க;
குடிபுகுந்த மரண அச்சம்
மயான அமைதி பேண;
வளவை, குச் சொழுங்கையினை,
அயலை,
கிராமம் ஊர் மாவட்டம் மாகாணம்,
பல்வேறு நாடுகளை,
பரந்த ஐந்து கண்டத்தை,
எல்லா இடர்களையும் தாண்டிவந்த இவ்வுலகை,
வல்ல பிடிக்குள் வளைத்து
அநாதைகளாய்
மாற்றிய கிருமியினால்…
மரண எண்ணிக்கை பெருக;
தோற்று நவீனம், தொழில்நுட்பம் முழிபிதுங்க;
நேற்றுவரை காத்திருந்த தெய்வங்கள்
நிஷ்டைகூட;
மனிதர், மனிதம், மனிதநேயம், தனித்தடங்க;
மனிதர்களை மனிதர்கள் மட்டும்
மீட்க முயல;
அநாதையாச்சு வானம், அநாதையாச்சு முகில்கள்,
அநாதையாச்சு காற்று,
அநாதையாச்சு வெய்யில்.
அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும்.
அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும்.
இன்னுமொரு மாதத்தில் இல்லை
மூன்று மாதத்தின்
பின் தோன்றலாம் வழமை என்றாலும்
இந்நாட்கள்
கனவுபோல்தான் இருக்கிறது!
ஆனால் மிக யதார்த்த
நனவு இது;
வரலாறு மறக்காத தனிமை இது!
28.03.2020