கண்களில் தெரியட்டும் கனவதன் எல்லை.
கைகளில் கனியட்டும் வாழ்கையின் காய்கள்.
புண்களும் ஆறிடும் பொழுதுகள் தோன்றும்.
பூ இனம் நாளையும் பூத்திடும் பாரும்.
எண்ணில் நரர்…கணம் அழுதிடும் போதும்
இதயத் துடிப்பூமை ஆகுமா தேறும்?
வண்ணம் வெளுக்காது வரும் தினம் வானம்…
வல்லமை வீழ்ந்திடா துயிர் பெறு நீயும்!
எத்தனை துன்பத்தைக் கண்டதிப் பூமி?
எத்தனை விமர்சனம் கேட்டத்தூர்ச் சாமி?
எத்தனை இடி புயல் அழிவுகள் நேர்ந்தும்
என்றும் தினம் புதிதாய் எழும் காலை!
கத்தியும் வாள்களும் ஓங்கிய போதும்
காதலும் ஞானமும் வாழ்ந்ததே நாளும்
சத்தியம் என்பது வாழ்ந்திடும் மட்டும்
சாகாது வாழ்வு; நீ செய் புதுத் திட்டம்!
காய்க்கின்ற மரங்களே கல்லெறி காணும்.
கல்லுக்கு கனிகளைப் பரிசென ஈனும்.
வாயிலாக் கல்லையா மரங்களும் நோகும்?
மரங்களும் ..பழங்களை பறித்து(ண்)ணும் வாய்க்கு
“நோய்வரக் கடைவதென்” றிடுமொடா சாபம்?
நொந்தாலும் அது கனி தர நிதம் பூக்கும்.
‘ஆய்ந்ததை’ அறிந்திடும் வாய்மை… யார் பக்கம்
அருள்தரும் என்பதை வரலாறு கூறும்!
03.04.2020