தெய்வங்கள் தம்மை நேரில்
திசைகளில் கண்டோர் இல்லை!
தெய்வங்கள் சிலையாய் நிற்கும்;
செயற்படும் அழகைப் பார்த்து
உய்தவர் இல்லை! நஞ்சைத்
தான் உண்டு உலகைக் காத்த
செய்தியைச் சிவனில் கேட்டோம்….
செய்ததைக் கண்ட தில்லை!
மனிதரின் வடிவம் பெற்று
மனிதர்க்காய் சிலுவை ஏற்று
பிணித்தாணி அறையப் பட்டு
பின் உயிர்த்தெழுந்து …வையந்
தனின் துயர் தீர்த்த தேவன்
தனை…இன்று கண்டோம் இல்லை!
எனினும் மானுடரில் பூத்த
இறைவரைக் கண்டோம் இன்று!
எங்கிருந் தெவரில் தொற்றும்?
எவரினைச் சாய்க்கும்? என்று
எங்களின் புலன்க ளாலும்
இனங்கானா நோயை…காப்பு
அங்கியொன் றணிந்து கொண்டு
அண்டியே நின்று …வீழ்த்தத்
தங்களைப் பணயம் வைத்துப்
பணி செய்வோர் …இறைவர் தானே!
யாவர்க்கும் தனித்தோர் வாழ்வு,
யாவர்க்கும் குடும்பம் பிள்ளை,
யாவர்க்கும் உறவு சுற்றம்,
யாவர்க்கும் கனவு காட்சி,
யாவர்க்கும் ஐயம்..,.சாவில்
அச்சங்கள் இயல்பாய் உண்டே!
யாவையும் ஒறுத்துச் சேவை
அருளுவோர் ….இறையின் பங்கே!
கண்காணா எதிரி யோடு
களங்களில் பொருதிக் கொண்டு
துன்புற்றோர் துயர்கள் தீர்த்து
துணிந்து ‘மாதிரிகள்’ சேர்த்து
என்னவும் நடக்கும் என்றும்
எதிர்பார்த்து….பாதிப் புற்றும்
இன்றும் போராடும் அன்னார்
இறைவரே….நேரில் கண்டோம்!
இப்பணி புரிவோர் ஈகம்
இவர்களின் தியாகத் தாலே
எப்படி யேனும் தொற்றி
எம்மை ‘ஓர் கை பார்த்’ தாட்ட
துப்பலில், இருமல், தும்மல்
தொடுதலில்…பரவும் வைரஸ்
தப்பினால் போதும் என்றா
தவிக்குது ….இவர்கள்(றைவர்) வாழ்க!