காட்டுத்தீ கருக்கிற்று கனவினது காற்பங்கை!
நேற்றுவந்த நோய்த்துயரம்
நீறவைக்கும் அரைப்பங்கை!
“இயற்கைக்கு மீள்வோம் எல்லோரும் ”
எனநனவில்
தயங்கி விதையூன்றி …
“தன்னிறைவு …உரமற்ற
உற்பத்தி” என்று உதார் விடுவோம் வான் வரையும்!
கற்பனை நன்றுதான்;
கண்டிடுமா எதிர்காலம்?
“தனிப்படுத்தப் பட்டுத் தவித்த
இயற்கை இன்று
மனிதனைத் தனிப்படுத்தி
வழிக்குத் திரும்பிற்று”
என்று இயற்கையுடன்
இனங்கவரும் மனித மனம்!
” நன்றே நடக்கட்டும் நாளை”
என வாழ்த்தும் வான்!
ஆனால் நாளை மறுநாள்
எல்லாமும்
சீராகும் போதும் ….ஆசை சிறையுடைக்க
‘பழைய குருடி கதவைத் திறடி’ என
வழமைக்குத் திரும்பி
வந்த முளை கருக…விதை
இறக்க ….மீள நஞ்சுகளின்
காந்தக் கவர்ச்சியிலே
உறைவோமோ….
யாரேனும் உறுதியாகச் சொல்லவேணும்!
16.04.2020