மரணத்தின் தூதுவர்கள்
வழமைபோல் அல்லாமல்
திரிகின்றார் ஓய்வொழிச்சல் இன்றி
திசையெட்டும்!
மேலதிக நேர வேலைசெய்து
அவர் உழைக்க,
காலனும் கண்ணுறக்கம் இன்றிக்
கடன் செய …முச்
சூலனும் மின்சாரச் சுடலைகளில்
சுழன்றடித்து
தீமூட்டித் தானும்
தீப்பிழம்பாய்க் கனல்கின்றான்!
இலட்சங்கள் தாண்டிற்று இறப்பு
கோடிகளில்
அலட்சியமாய்ப் பெருகிடுது
அடங்காத நுண் கிருமி!
எத்தனை தடைபோட்டும் பரவி
ஒரேசமயம்
எத்திசையின் ஊர்களையும்
விழுங்குது நோய்க் காட்டாறு!
ஒருபுள்ளி யில் வீழ்ந்த உயிர்விசவித் —
துலகைமூடி
வேர்பரப்பி விருட்சமாச்சு…
வீழ்த்த வழி ஏது?
எல்லாமும் ஸ்தம்பித்த தின்று!
மீண்டென்று
எல்லாமும் வழமையாகும் ?
எமனுக்கும் தெரியாது!
ஒருவரில் மற்றொருவர் தங்கிவாழும்
உலகத்தில் …
அனைவரும் ஒரேசமயம்
நொந்த அவலத்தில்….
நாளை எவரைநம்பி யார்
எவ்வாறு மீண்டு
எழுவதெனும் கேள்விகள்…முன்
இன்றைவிட நாளைக்கு
எழ இருக்கும் சவால் தாண்ட
யாரிடத்தில் திட்டமுண்டு?
25.04.2020