யாரையும் குறைசொல்லத் தேவையில்லை!
நாமெலோரும்
யாரிலும் குறைகளைக் கண்டும் பயனில்லை!
உச்ச அழிவுற்ற உயர்நாட்டில்
எவ்வாறு
அச்சம் கொள வைத்து
மடங்கில் அடுக்குகளில்
தொற்றிற்றோ இந்தத் துயரம்….
அதைப்போல்த்தான்
முற்றி… மடங்குகளில் முனைந்து
பெருகுதிங்கே
இந்நாளில்!
கிடுகிடென்று இடருற்றோர் எண்ணிக்கை
கண்மண் தெரியாமல்
கட்டுமீறிப் பரவிடுதே !
அடுத்தென்ன ஆகும்? அங்கேபோல்
உயிர்பறிப்பு
தொடராயா நீளும்?
தொலையுமா நம் தவங்கள் வரம் ?
எடுத்த முற்காப்பு எல்லாம்
பொருள் இழந்தா
போகும் ?
எங்கள் பொறுமை குலைந்து மேலும்
நீளுமா காலம்
நிம்மதியை மீட்டுவர?
நிலைமையின் கொடூரம் நினைந்து
தளர்த்திவிட்ட
வழி தடைகள் மீண்டும் வரித்து
அனைவரிலும்
பழிதொடாது காக்க
பாயவேண்டும் உடனடியாய்!
இந்தக் கவி..எனது இறுதி வழி !
நாமெலோரும்
சிந்தை தெளிவதற்காம் சேதி !
இதிலெங்கே
அந்தக் குறியீடு அரூபப் படிமங்கள்
எங்கு பல் அர்த்தம் பயில் சொல்
பின் நவீனமுறை
என்றும்…..
ஏன் இதிலே பிரசார கோஷ நெடி
பொங்குதென்றும்….
எல்லாம் புரிந்த கலை மேதைகள்
விண்ணர் விமர்சகர்கள்
விண்ணாணம் பேசிடலாம்!
அன்னவரைப் பற்றி அலட்டியே கொள்ளாமல்
என்கடன் இதுவென்றும்
எனக்குத் தெரிந்தவிதம்
இந்த இடர்கடக்க என்பங்கிக் கவியென்றும்
என்சனத்தை விளிக்கவைக்க
இவ்விரவில் முயல்கின்றேன்!
26.04.2020