அப்பா(கா)விகள்

குண்டுகளைக் காவிக் கொடிய
சமர்க்களத்தில்
சென்று
மனித வெடிகளாகிச் சிதைந்து
அந்த இடமழித்த அநேககதை இங்குண்டு!
இந்தமுறை குண்டுகள் இல்லை
கண்காணாச்
சின்னக் கிருமிகளை
தீய நுண் அங்கிகளைக்
காவுகிறோம் தாமென்ற கள
யதார்த்தம் உணராது,
எண்திசையும் சென்றுவந்து,
எங்கும் சமர்க்களங்கள்
உண்டாக்கி…. நோயை
உறவு நட்பு அறியாதோர்
என்றெவர்க்கும் தந்து, நரர்… எமதூதர்
ஆகிவிட்டார்!
மனிதரே மனிதர்க்கு மரணம்
பரப்பி மாய்க்கும்
காலர்களாய் மாறிவிட்டார்….கவனமின்றி!
ஆம் மனிதர்
தாமே மரணத்தைப் பரப்பி
தாமும் மரித்து
ஊருலகம் மரிக்கவைக்க உதவினோம்..
என்றறியா அப்
பாவிகளாய் ஆனார்!
பரிசோதனைச் சாலை
சோதனைக் குழாயே சொர்க்கமென….
பாம்பு வெளவால்
மேனியே மேலான மோட்சமென….
இந்தகொடும்
நோய்க்கிருமி ‘வையம் முழுதும் சொர்க்கம்’ எனப்பரவக்
காரணராய்க் காவிகளாய் மாறி…அவை
கண்டங் கடந்து
சாவிதைக்க…. இன்று
சரித்திரமும் சாயவைத்தார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply