ஆயுள் ரேகைகள் நீண்டு வளர்ந்திட்ட
அழகுக் கை பல அன்று சிதைந்தன.
ஆயுசு நூறு என்றொரு சாத்திரம்
அளந்த மெய்களும் தானே சிதறின.
காவல் நூல்கள், தாயத்துக் கட்டிய
கவிதைகள் கூடக் காணாமற் போயின.
கோவில் கடவுளே தஞ்சம் என நம்பிக்
குனிந்த குடி(ல்)களும் கூட நீறாகின!
போரின் வாயிடை பூக்களும், காய் கனி
புதுத்தளிர்கள், விழுதுகள், வேர்களும்,
யாவும் போயின….யமனது வேலைகள்
யாவிலும் பாதி நம் ஊர் ஒழுங்கையில்
தான் நடந்து ..அவன் ‘பாசக் கயிறுகள்’
ஆயிரம் இங்கு அறுந்து அழிந்தன.
ஏன் எதற்கென்று இல்லாது சா விழும்
இருண்ட தீ…யுகம் சென்று கழிந்தது!
அந்தக் கால நினைவின் சுவடெதும்
அழியவில்லை ஆழ் மனதின் சுவர்களில்.
நொந்த நோக்களை உடல்கள் மறக்கலாம்
நோவு உள்வலி நெஞ்சில் நீள் கின்றது.
மந்திரம் மாயம் மாபெரும் தந்திரம்
மாற்ற வில்லை காண் யுத்த வடுக்களை!
வெந்த புண்களில் வேல்களாய் இன்றும் தான்
வீழும் இடர் இடி..காலம் கரையுதே!