சுக வாழ்வு

வீட்டைவிட்டு எப்போ வெளிச்சென்று
வந்தபோதும்,
காலை மதியம் மாலையிலும்,
வீட்டு முன்முற்றம்
கிணற்றடியில் கால்முகம் கழுவித்
துடைத்துமீண்டு;
பிணவீடு சென்றுவந்தால்,
பிணம் ஒன்றைக் கண்டுவந்தால்,
சிகை அலங்கரித்து வந்தால்,
தோய்ந்தபின்பே வீடு சேர்ந்து;
நகம் வெட்டக் கூட நாள் நேரம் பார்த்திருந்து;
பிள்ளைப் பெறு, பூப்படைந்த பெண்
இருந்தவீடு,
சென்றாலோ தீட்டென்று;
மகளிர்… ‘திரி’ தினங்கள்
ஒதுங்கவைத்து;
மரணம் ஒன்றால் உறைந்த வீட்டைத்
துடக்கென்று ஓர்மாதம்
உண்டி நல்கித் தனிக்கவைத்து;
அந்நாளில் அங்குசென்று வருவோர்
முழுகாமல்
தம்வீட்டுள் நுழையத் தடுத்து;
துடக்குள்ளோர்
கோவில் பொதுஇடத்தில் கூடக்
கணிசமான
காலம் தவிர்த்து;
துடக்குக் கழிக்கு(ம்)நாளில்,
ஆண்டு நினைவில்,
ஆண்டில் வரும் பண்டிகை முன்,
வீடு சுற்றம் எல்லாம் கழுவிப்
புண்யானம் செய்து;
வீதி அழுக்குகள் வீட்டுள்
புகத் தடுக்க
பாத ரட்ஷை வாசற் படிமுன்
களற்றவைத்து;
வாரத்துக் கொருதடவை உபவாசம்,
மாசமாசம்
வேறுவேறு விரதங்கள்,
வித விதமாய் நேர்த்திகள்,
இப்படி….
‘தனித்திருத்தல்’,
‘சுயதனிமைப் படுத்தல்’, என்று
எப்போதோ இருந்து எம்மவர்கள்
காத்தவாழ்வு
அன்னவரின் ஆசார அசரா முயல்வோடு…
மண்ணினது வாசத்தை
மறவா நெறியோடு…
உழைத்தல் களைத்தல்
உறங்கி ஆறி ‘இல்ல இன்பில்’
திளைத்தலென நின்ற செருக்கு
சிறப்போடு…
எதைஎதை எப்போது ஏன் தவிர்க்க
வேணுமென்றும்
விதிசெய்து…
மீறின் விலக்கிவைத்து…
நூறாண்டு
ஆரோக்யம் காண….,,
‘அனுபவித்து’ நம் முன்னோர்
வாழ்ந்துயர்ந்தார்!
வாழ்வின் முழுமையை
ஒட்டுறவை
ஆழ்ந்துணர்ந்தார்!
யாமதை மறந்து இன்று
நோயால்
ஊருலகம் ‘அதை’உணர்ந்து
உறுதியாகப் பின்பற்ற
நாமும் இன்று மீண்டோம்
நம் முன்னோர் வாழ்முறைக்கு!
வார்த்தையில்லை வாழ்த்த…
நம் முன்னோர் ‘அனுபவத்தால்’
தேர்ந்த சுகவாழ்வை
சீதனமாய்த் தந்த தீர்வை
“காலம் மீண்டும் வாழு” என்னும்
கடத்துவோம் நம் சந்ததிக்கு!
02.05.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply