உழவு?

உழப்பட்டுத் துடிக்கிறது உயிர்ப்பாய்க்
கிடந்த வயல்!
உழவு வயலுக்கு
ஒன்றும் புதிதல்ல…
உழவன், உரிமையாளன்,
உழும் ஏர், விதை நெல்,
கலப்பை, சிறுபோகம்,
காலமழை, பெரும்போகம்,
விளைவு,
அறுப்பு, தூற்றல், வழமை;
இதில் துன்பமில்லை!
இந்த உழவு..இவ்வகைக்குள்
வரவில்லை!
உழுத வயல் ஒன்று….
உரிமையாளர் வேறுவேறு.
உழுத முறை வேறு.
உழுத திசைவேறு.
உழுதழித்த மாடு,
உழுத ஏர் , விதைத்தநெல்லின்
இனம்,
மற்றும் காலம்,
இறைப்பெல்லாம் வேறுவேறு!
உழப்’பட்டுத் துடிக்கிறது…
உயிர்ப்பாய்க் கிடந்த வயல்!
உழவு இது வேறு…
உயிரின் வேர் வரை உழுது
கிழித்த
நரக வேதனையில் உயிர் கிழிந்து
உழப்பட்டுத் துடிக்கிறது
உயிர்ப்பாய்க் கிடந்த வயல்!
உழுதவர் தொலைந்தார்..
உயிர்ப்போடு உணர்வை
இழந்த இது என்னாகும்?
எவர் தக்க பதில் சொல்வார்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply