நாதி யற்றவர் ஆனோர் …நிலத்தினில்
நாளை என்பதை யாரின் துணையொடெவ்
வீதி யாலே கடந்திடுவோம் …?அமர்
விபத்தில் சிக்கி முடவர் குருடராய்
வேதனை சுமந்தா நிதம் யாசகம்
வேண்டி வாழுவோம்? நாமித் திசையதன்
ஆதி வாசிகள் ஆயினும் ஏனின்னும்
அதை நிரூபிக்க ‘உறுதியைக்’ காட்டிடோம்?
வெளியில் காய இரணங்களும் ஆறின.
வேக வைத்த இரவுகள் நூர்ந்தன.
உளத்தில் இன்றைக்கும் ஆறாத காயத்தில்
உதிரம் கசிய உள் வலிகள் பெருகின.
அழகுச் சிரிப்பு முகத்தில்; விசும்பலும்
அழுகை கேவலும் அகத்தை நிறைத்தன.
இழப்பின் வெறுமையை இன்றும் நிரப்பாமல்
இறையும் அறங்களும் எம்மை வஞ்சித்தன!
அன்றி ருந்தன அன்பு அகங்கள்…ஆம்
அருள் பொழிந்தன அழகுக் கிராமங்கள்.
அன்று றைந்தது மண்ணின் சுவை, இதம்.
அன்று யிர்த்தன அழியா ஆசாரங்கள்.
என்று எங்களைச் சாய்த்தூழி வீழ்த்திற்றோ
இன்றும் மீளலை இயற்கைச் சமநிலை.
முன் தெரியுது மீட்பர்களின் நிழல்.
மூச்சைத் தேடி முனகும் வரலாறு!