விழுந்து புரண்டு விழுந்து புரண்டெழுந்து
உழன்று ஓரிரண்டு
முறையெழுந்து சலங்கழித்து,
அலையும் மனதை அடக்க முடியாமல்,
‘உறக்கம் தொலைந்ததுஏன்’
எனநினைத்த ஓர்கணத்தில்…
எனைமறந்து துயின்றேன்!
என்னை எழுப்பிற்று…
இரண்டாவது சாமத்தில் உறங்காதோர்
‘பெட்டைநாய்க்காய்’
அடிபட்டுக் கடிபட்டும்
அடங்காத நாய்களூளை
எரிந்து விழுந்து
கல்லெறிந்து கலைத்துவிட்டு
எரியும் விழிமூடி ஒருவாறு துயில்கலக்க
மீண்டும் எழுப்பி
விசரேற வைத்ததையோ…
மூன்றாவது சாமத்தில் எனைமொய்த்து
நானடிக்கக்
கையெல்லாம் இரத்தக்
கறைபடியச் செய்துவிட்டு
செத்துச் சிதறின…
நுளம்புகளாம் துர்க்கனாக்கள்!