சாமி உறங்கியதாய்…
சாமி மயங்கியதாய்…
சாமி உயிர்விட்டுச் சமாதியாய்ப்
போனதுவாய்…
ஏதும் குறிப்பில்லை எங்கும்!
அது நிஷ்டை
கூடிக் கிடக்கும்.
குவிந்து மோன விரதமென
ஊமையாய் ஒதுங்கி
பேச்சு மூச்சுக் காட்டாமல்
மூலஸ் தானத்தில் முடங்கினாலும்
இன்றில்லை
நாளைக்கு என்றாலும்
அது கண்ணைத் திறந்து
பார்க்கும்;
தன் பதிலைக் குறிப்பால் பகிர்ந்துவிடும்!
ஓரிரு சொல்பேசி,
ஓரிரு காட்சி காட்டி,
ஓரிரு நிகழ்வுகளால் உணர்த்தும்
தன் இருப்புதனை!
ஏதோ ஒருவழியில்…
ஏதோ ஒரு அதிர்வில் …
உள்ளூர்க்கு மெய் உணர்த்தும்!
அறம் வெல்லவும் உதவும்!
“இல்லை அது” என்றும்,
“உறங்கிற்று, ஊமையாச்சு
இல்லை இனிஅதற்கு அருள்” என்றும்
நீ கூறிச்
செல்லலாம்;
அது என்றும் சிரஞ்சீவியாய் வாழும்!
12.04.2020