நல்லதே நடக்கட்டும்!

பொய்யாய்ப் பழங்கதையாய்
போனதெல்லாம் போகட்டும்!
மெய்யை வருத்தி,
மேனியெல்லாம் புண் பெருக்கி,
உள்ளத்தில் ஆறா ஒருகோடி காயங்கள்
அள்ளி அடுக்கி,
அகச் சுவரில் குருதி நதி
காயா நிலைபெருக்கி, ‘காயடித்த’ காலத்தின்
பேய்க்கரங்கள் எல்லாமும்
பிய்ந்து சிதறட்டும்!
மாறா வடுக்கள் மறையட்டும்!
துயரக்கதைகள்
பாறும் விருட்சமாகப்
பாறிச் சிதையட்டும்!
தொட்டுத் தொடர்ந்து தொலைத்த
துரோகங்கள்
கெட்டுக் கழியட்டும்!
கீழ்மைக் குணத்தோடு
“என்ன நடந்தால் எமக்கென்ன”
என்றிருந்த
சின்னத் தனங்கள்
செத்துத் தொலையட்டும்!
எப்போது… யாரின் உழைப்பில்
பிழைக்க எண்ணும்
தப்பை வளர்த்தோமோ…
அன்றிருந்தெம் ஆற்றல்
கைப்பலம் நழுவிற்றெம் கைவிட்டு;
அடங்காமல்
அப்போ உழைத்து
அதால் உயர்ந்த வலிமைமனம்
இப்போது வந்து
எமை மீட்டெழுப்பட்டும்!
இருந்த எள்ளையும் எட்டாகப் பங்கிட்டு
மருந்தாக உண்டுயிர்த்த கூட்டு வாழ்வு
மீள இங்கே
வரட்டும்!
எவரையோபோல் வாழ ஏங்கிச்
சுயம் தொலைத்த
குருட்டுத் தனங்களிலே
கொள்ளி இடி வீழட்டும்!
வரட்டுக் கெளரவங்கள்
வழக்கொழிந்து நாறட்டும்!
ஒருவருக் கொருவர் உதவி
ஒன்று சேர்ந்து வாழும்
பெருவாழ்வு பூத்துப் பிணி,
துயரை ஒட்டட்டும்!
இயற்கையும் காலமும்
அடிக்கடி கண்முன் எடுத்–
தியம்பி…புரியாட்டி
இடித்தும் பொருள் கூறிக்
கற்பிக்க…
பாடங்கள் கற்றுத் தெளிந்து இனி
அற்பத் தனம் விட்டெம்
அகம் விண்ணாய் விரியட்டும்!
அற்புதங்கள் எங்கள்
அயலில் மலரட்டும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply