வண்ணமயில் தோகை விரித்தாடுகிற போது
வாய்திறந்து சந்த கவி பாடுகிற போது
என் மனது விண் படியில் ஏறுகிற போது
இன்பமெழும்… ஆம் இதற்கு ஈடு இணை ஏது?
வாசலிலே நீர் தெளித்துப் போடுகிற கோலம்
வடித்திறக்கவே மலரும் குத்தரிசிச் சோறும்
பாசம் பொழிந்தென் நுதலில் நீ அணியும் நீறும்
பாரில் உயிர் வாழ்வினுயிர்ப்பை நிதமும் கூறும்.
கோவிலதன் நாதமணியோடு வரும் பாட்டு
கொட்டு தவில் தேன் குழலினோடு எழும் கூட்டு
தாவி விளையாடுகையில் கேட்கும் கர வேட்டு
தழுவ…உயிரூட்டும் தமிழ் மடியின் தாலாட்டு.
எளிமையதும் இனிமையதும் பொலியும் எங்கள் ஊரின்
இணைந்து வடம் இழுக்க வரும் உறவிணையும் தேரின்
அழகொழுகும் வயல் கடலும் சுமக்கும் எங்கள் சீரின்
அமுதமெனும் நீரின்…இதம் இ(ல்)லையே எங்கும்…தேறின்!
பூமியது பேரழகின் உச்சமெனக் கூறு!
‘பொன் மடியில்’ நீபிறந்த துண்மை…பெரும் பேறு!
சாமியதுன் தாய் நிலமே சார்ந்து எழு …வேறு
சாதனை எங்கே செயினும் தோணுமொடா பேரு?