நெகிழ்ந்த கயிறுகள் நின்று
மீண்டும் இறுகி
அகத்தைப் புறத்தை
அழுத்தத் தொடங்கியதால்…
அசைக்க முடியாமல் அலறி ஓயும்
கை கால்கள்.
நசிந்து திணறிடுது
நான்கு திசைகளிலும்
விட்டாத்தியாய்ச் சிறகை விரித்த
மனப்பறவை.
கட்டு இறுக கதறிக் கலையும் கனா.
திட்டி ஓட்டுள் ஒடுங்கித்
திகைக்கிறது நத்தை நனா.
எவ்வளவு தூரம் இனிப்பார்ப்பதெனும் தீர்ப்பில்,
எவ்வளவு தூரம் இனிக்கேட்பதெனும் பேச்சில்,
இவ்வளவு மணமே
இனி முகர்வதெனும் பதிலில்,
இவ்வளவு சுவையே
இனிச் சுவைப்பதெனும் முடிவில்,
எவ்வளவைச் சிந்திப்ப தினியென்று
மறுகும் உளம்.
ஆகக் குறைந்த பட்சம்
அகத்தின் இயல்பசைவைக்
கூட மறுதலிக்கும்
கூச்சல் குழப்பத்தில்
மோனத் தவமியற்ற முனைகிறது எண்ணம்!
ஏன்
சோலியென அடங்கிச்
சுருள்கிறது சோர்ந்து சுயம்!
05.06.2020