சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாய்
நின்ற நம்
வீதியோரப் பனைகளை
விசிறியாக்கிப் போம்…காற்று
தேன் நக்கித் தாகம் ஆற்றும்
திக்கிலுள்ள பூக்களிலே!
கோடை உறிஞ்சி உதிர்ந்த
வெறும் சக்கையாக
ஆற்றின் தடம் கிடக்கும்!
அயலிலுள்ள புல் பூண்டும்
சேமித்த நீர் கொண்டு சீவிக்கப்
பழகிவிடும்!
ஆயிரம் கைகளால்
அனல் வெய்யில் முலாம்பூச
வாடிக் கிடக்கும் வனம்…
முகிலில் நீர் தேடும்!
மாபெரும் விருட்சங்கள் வாழும்
எக் கோடையிலும்….
வேர்களின் முயற்சிக்கு விருது தர
வேண்டாமா?
நீர்தேடிக் காய்ந்த நிலம் துளைத்து
பல அடிகள்
பாறைகளை ஊடறுத்து
எங்கோ நீர்ச் சலசலப்பை
வேர்நுனி கேட்டு விரைந்துபோய்
உறுஞ்சிடுமே….
வேர்களின் முயற்சிக்கு விருது தர
வேண்டாமா?
தாகம் தணித்தல் சாதாரணம் அல்ல…
வாழும் அனைத்தும்
வருந்தித் தம் தாகத்தை
தீர்க்கத் திரிய
திருட்டுத் தனமாக
நீ எளிதாய்த் தாகம் தணிக்கும்
வழிதேடி
ஓடி…
முயலாமல் விக்கி
உயிர் விடுகின்றாய்!
வாழத் தெரியாமல் வழியில்
தொலைகின்றாய்!
06.05.2020