கவிதை என்பது கசிந்து உருகியும்,
கவிதை என்பது கட்டி இறுக்கியும்,
கவிதை என்பது கொஞ்சிக் குலாவியும்,
கவிதை என்பது கெஞ்சி அளாவியும்,
கவிதை கண்ணீர் சிந்த இழக்கியும்,
கவிதை கிச்சுக் கிச்சுக்கள் மூட்டியும்,
கவிதை கம்பீரம் பீற உசுப்பியும்,
காதில் பூந்துயிர் மீட்டவும், வேண்டுமாம்!
கவிதை உயிருள்ள சீவன் எனச் சொல்வேன்.
கவிதை எழில்மிகு தேவதையாம் என்பேன்.
“கவிதை….நாடி நாளத்தில் இரத்தமே
கடத்தப் படவும், நரம்பு அதிரவும்,
கவரும் மூச்சினில் சூடு பறக்கவும்,
கவின் உயிர்ப்பெழுந்தாடி மினுங்கவும்,
புவியில் காலம் கடந்துயிர் வாழ்ந்திடும்
புதிர் உயிர்…”என நிச்சயம் நம்புவேன்!
வெறும் சடமென அசையா திறுகியே
விறைத்த பாறையாய் அழகு இனிமைகள்
இறக்க, நாடி இதயத் துடிப்புகள்
எதுவும் அற்றிட, உயிர்ப்பூட்டும் சுவாசப்
பொறிமுறை கெட, புலன்கள் மரத்திட,
பொருள் இருண்டிட, உணர்ச்சி நரம்புகள்
அறுந்து தொங்க, சூடற்றும் கிடப்பது
அறிக….கவியல்ல..அதன்பெயர் வேறடா!
06.06.2020