தீயணைக்கச் சென்றவனே….
சா அணைக்க ஏன் சரிந்தாய்?
தீ அணைந்திருக்கும் அங்கு;
தீப்பிடித்து.. எம் நெஞ்சு!
நீ அணைத்த தீயாலே நிஜம்
தப்பிப் பிழைத்ததன்று!
நீ அணைந்தாய்…
தீயினில் எம் நிஜங்கள் கருகுதின்று!
பாட்டும், இசை, கூத்தும், பலவேடம்
தரித்தரங்கில்
நாட்டை இரசிக்கவைக்கும் நாடகமும்,
எனக்… கலையின்
கூட்டில் குடியிருந்த குயில் நீ…
நின் குடும்பத்
துன்பம் துரத்த துணிந்தடித்த புயல் தான் நீ…
என்றும் பிறர்க்குதவும் ஈர மழையே நீ…
ஊருக்காய் உடல் தேய்த்து
உழைத்த சந்தனமும் நீ..
வாழும் வயது…
மனை பிள்ளை உறவென்று
யாருக்கும் இனிய தென்றல் நீ…
யமன் உன்னை
“வா” என்றழைத்தானா?
“வந்து சாப்பிடுவேன்” என்று
போனாய்…ஒரேயடியாய்ப் போய்விட்டாய்…
ஏன் ஐயா?
உனக்காகக் காத்திருந்த உணவாக
நாமும் தான்
நனவிலன்று காத்திருந்தோம்…
கனவாக ஏன் கலைந்தாய்?
வாடும் துணைக்கும்
மருண்டு அழும் குஞ்சுகட்கும்
ஏது தந்து உந்தன் இழப்பை ஈடு செய்ய ஏலும்?
யார் தான் உன் வெற்றிடத்தை
நிரப்பி விடக்கூடும்?
17.06.2020
.(விபத்தில் உயிர் நீத்த யாழ் மாநகர சபை தீயணைப்பு வீரர் நினைவாக)