ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி
அழியலை பூமியின் அழகு.
ஆழவந் தேபத் தாயிரம் ஆண்டா
அறியலை நீ..புவி மனது.
பாயிரம் தானே பார்த்தனை இன்னும்
பயிலலை யே புவி அறிவு.
பாதகம் செய்தாய் பயன்களே பெற்றாய்
பழகலை நீ…அதன் உறவு!
ஆடிய ஆட்டம் அடங்கிடும் முன்னம்
ஆக்கினை தந்தது கிருமி.
அண்டங்கள் தாண்டி ஆழ நினைத்தாய்
அடங்கினாய் தும்மி நீ இருமி.
மூடினாய் மூஞ்சி முக்காடே எஞ்சி
முழிக்கிறாய்! இயற்கையே உறுமி
முறைத்தது! பாடம் முடியலை…மாற
முயலாட்டில் தோற்பாயே பொருமி!
முகத்திலே கவசம், மூன்றடி தொலைவும்,
முன் பின்னும் கைகாலைக் கழுவும்
முறைமையும், வாழும் மூச்சினை மட்டும்
முயன்றுமே காக்கலை! நுழையும்
மிகப்பல தொற்று வருத்தம் அண்டாது
விரைந்ததாம்…!அத்தனை புகழும்
மிகச் சிறு கிருமி விளைத்தது …பாடம்
விளங்கிற்றா தொடர் இவை இனியும்!
இயற்கையோ டூடி இயல்பினைத் தேடி
இதம் பதம் துய்த்திடும் வாழ்வு
இருந்தது அன்று! இயற்கையைத் தின்று
செயற்கையால் ஈட்டியினாய் தாழ்வு!
உயிர் போன பின்பு மயிர்காத்து என்ன?
உணர்ந்திருப்பாய் இந்த நாளு!
உடனடி யாக இயற்கையோ டாடும்
உறுதிகொள்; நாளையை ஆளு!
06.06.2020