காலாற யான் நடந்த களிமண் வீதி
காப்பற்றாய் மாறிநிற்கும்! காற்றை வாங்கி
மேலெல்லாம் ஒத்தடங்கள் பிடிக்கும்…மூலை
வேம்பு நின்ற இடத்தில் தொலைத் தொடர்பைக் காவும்
கோபுரமா நிழல் விரிக்கும்? கிடுகு வேலி
குறைந்தெங்கும் மதில் சூழும்…மாரி வெள்ளம்
போக இடம் தெரியாது முழித்து…வீட்டுள்
புகும்…வாய்க்கால் அற்றூரே மூழ்கிப் போகும்!
அன்றிருந்த வயல் தோட்டம் அகன்று, ஆங்கே
அடுக்குமாடிக் கல்யாண மண்டபங்கள்
புன்னகைக்கும்! சோறின்றிப் பிள்ளை பெற்று
புதுமையென்ன ஊர் காணும்? பயனென் னாகும்?
சின்னஞ் சிறு ‘குடிற் கோவில்’ …கோபுரங்கள்
செழிக்க கும்பாபிஷேகம் கண்ட போதும்
என்ன…?இரண்டொருவருக்கே அருளை நல்கும்.
இழுக்க தூக்க ஆட்களற்றே விழாக்கள் நீளும்!
காணி முற்றும் கட்டடங்கள்…வீட்டுக் குள்ளே
கக்கூசும்…ஆடு மாடு கன்று காலி
யாருக்காம் வேணும்? குப்பை கூளம் தாட்டு
யார் தோட்டம் செய்ய ஏலும்? பற்றை மண்டும்
காணி, வீதி, சந்தியுண்டு குப்பை போட!
கால நேரம் யார்க்குண்டு ஊர்க்காய் நேர?
வீண் பொழுது போக்கும் பெருங் கூட்டம் …செய்த
கை வினையை மறந்தலையும் கனவில் வாழ!
ஓலை வேய்ந்த பள்ளியெல்லாம் ஒழுங்(க்)கு மாற்றி
ஓரிரண்டு மூன்று நான்கு மாடி ஆக
கீழ்நிலையில் கடைசிக்கு கல்வி செல்லும்!
கிளித்தட்டு, கெந்தியடி, கிட்டி, பாட்டு
தேவாரம், கதை, கவிதை, நடனம் பேச்சு
தெரியாத தலைமுறை ‘zoom’ தனிலே வெல்லும்!
நூறிருக்கு இன்னும்…சொன்னால் எம்மண் நோயும்
நொடியும் உலகறியும்…வாய் எதைத்தான் சொல்லும் ?
25.05.2020