ஊர டங்கு தொடர்ந்து வளர்ந்தது.
உயிர்ப் பயத்தில் பார் அடங்கிக் கிடந்திடும்
காலம்…இங்கும் கனத்துத் தவிக்குது.
கவலை பேயாய்க் கவிந்து படர்ந்தது.
வேரில் விழுந்து அரிக்கும் கிருமியால்
விழுதும் நொந்து விருட்சம் முழுவதும்
பாறி வெந்திடக் கூடாது என்றின்று
பகல் இரவாய்த் தனித்துப் பதுங்குது!
குண்டு விழுந்து குதறிய நாட்களில்
கொடிய சட்டம் பாம்பாய் இறுக்கையில்
மண்டையில் விழும் சூடு …தலைகண்டால்!
மரணம் நேரும் யாரும் …வெளிவந்தால்!
இன்று அந்த ‘அடங்கு ‘ நிலையில்லை!
எவரின் உணர்வும் உணரா எதிரியை
கண்டிடக் கூடாது என்று தனித்துமே
கால வரையறை அற்றூர் அடங்குதே !
இன்னும் எத்தனை நாளிது நீளுமோ?
இந்த ‘அடங்குதல்’ எங்களைக் காக்குமோ?
இன்னும் இறுக்கியே பட்டினி போடுமோ?
எம்மை தொற்றில் இருந்துமே மீட்குமோ?
இன்னும் எத்தனை உயிரை எடுக்குமோ?
இத் தனித் திருத்தல் தொடர்தலே
நன்மை என்கிறார்…இனிவரும் நாட்களே
நம்மை மேய்க்குமாம்…என்னதான் ஆகுமோ?
மரக்கறி விற்போர் வீடுவரை வந்தும்,
மச்சப் பெட்டிக் காரர் தினம் வந்தும்,
இருமுறை பாண் வண்டில் வலம் வந்தும்,
இடைக்கிடை மருந்தகம், சங்கம், வங்கிகள்
திறந்தும் கிடக்க…திசைகள் வெறித்தது!
தெரு திரிவோர்க்கு…. தீனி கிடைக்குது!
நெருங்கி அபாயம் அணுக…தனிமையே
நீக்கும் இடரை…. யதார்த்தம் உணருது!
நாளும் நாளும் பெருகும் இழப்புகள்,
நாடு நாடாய்ப் பரவிடும் தொற்றுகள்,
“மேலும் ஆயிரம் ஆயிரம் சாவுகள்
விளையும்” எதிர்வு கூறும் அறிவியல்!
வீழா வல்ல அரசுகளும் மோதி
விறைக்க….பூமி முழுதும் மிரண்டுள்ள
காலம் எதைத் தீர்ப்பாய்ச் சொல்லிடப் போகுதோ?
கருகக் கூடாது மானுடம்; நேர்வமோ?