என் விருப்பினை எனது தெரிவினை
“இவர்க்கு” என்று எவர்க்கும் தெரியாது
இன்று புள்ளடி இட்டேன்; திரும்பினேன்!
“இஃது என் ஜனநாயகக் கடன்… அதை
நன்று செய்தன்” என்றார்த்தேன்; “அது மட்டும்
நாளை வென்றிட வேணும்” பிரார்த்தித்தேன்!
என்ன ஆகுமோ நாளை? அது வென்றால்
எனது நம்பிக்கை வென்றதென் றெண்ணுவேன்!
ஒருவேளை எந்தன் விருப்பத் தெரிவினை
ஊர்கள் ஏற்காது தோற்க விரட்டினால்…
உரிய எனது நம்பிக்கை தோற்றதை,
உவப்பிலாதோர் வென்றதை, விரும்பியோ
விருப்பமின்றியோ ஏற்றிட வேண்டும் யான்!
வீறாப்பெல்லாம் விட்டு வரும் ஐந்து
வருடம் வென்றோரில் நொட்டை பிடித்துத்தான்
மறுக வேண்டும்…இஃதே யதார்த்தமும் !!
பெரும்பான்மை பெற்றோர் வென்று மகிழ்கையில்
பெரும்பா ன்மைக்கு எதிராக வாக்கிட்ட
அரைவாசிக்குச் சற்றுக் குறைந்தவர்
அடுத்த ஐந்து வருடம் மனதுளே
பொருமி வாழுவார்…இந்த யதார்த்தத்தை
புரிய வில்லையா இவ் ஜன நாயகம்?
புரிந்தும் குறைநிறை ஆயிரம் உள்ளதை
பொறுத்து வாழ்வதே எம் ஜன நாயகம்!
05.08.2020