கவிதை என்ற உடலில் வாழும் உயிராகி
கனவு கோடி நனவில் நித்தம் தருவாயே
செவியில் வீழ்ந்து இதயம் தோய்ந்து மனஏரி
தெளியவைக்கும் கவி அன் றாடம் அருள்வாயே!
தவிலிசைக்கு தலைஅசைக்கும் திரு வீதி
தமிழ் மணக்க….எனது சிந்தும் இரசி நீயும்.
புவிவெறுக்கும் பொழுதும் ஏக்கம் கிடையாதே
பொருள் உணர்ந்து புரி நீ…கந்தப் பெருமானே!
அடியவர்கள் விழிசொரிந்து அழுவார்கள்.
அயலவர்கள் உனை உணர்ந்து தொழுவார்கள்.
கொடியர் உந்தன் கருணையாலே குனிவார்கள்.
குவலயத்தர் எவரும் உன் முன் பணிவார்கள்.
இடிவிழுந்து கவலை சூழும் கணமெல்லாம்
இருண்ட நெஞ்சில் உனது வேலே சுடராகும்.
மிடிமை போக்கென் கவிதை மொட்டு மலராகும்.
விடியும் துன்பம் முடியும் வென்று நிமிர்வேனே!
எழுக தேரில்… திசைகள் மீது சொரி நீறு!
இனிய தீர்த்தம் மருந்து போல தெளி வேறு!
உழுது சாறு…மனது எங்கும் அழுக் காறு!
உயிரின் ஞான பசிக்கு ஊட்டு அருள்ச் சோறு!
பழுது பாரு புவியில் எங்கும் தக ராறு!
பழியில் வந்த கொடிய நோயும் விழச் சீறு!
எழுதும் எந்தன் கவி…இடர்கள் சுடு மாறு
இயக்கு…நல்லை அரனே….நின்று தடு ஊறு!
14.08.2020