முருகா முருகா முருகா

நிதமும் வருவாய் மயிலில்
நிழலாய்ப் படிவாய் உயிரில்
விதியின் சதியை உதையும் கழலே
வினையை பொடிசெய் கனலே குளிரே (முருகா..)

உனையே தொழுதோம் கணமும்
உனையே பணியும் மனமும்
எனினும் சலனம் எழுமே அலையாய்
இவையும் தணிய எமைமீட் டருள்வாய் (முருகா..)

இடரும் தொடரும் தொடரும்
இடியில் இதயம் அதிரும்
நொடிகள் அவிழும் கணமும் விலகும்
நொடியும் எமையும் நிமிரும் படி செய் (முருகா..)

உயிரின் சுமைகள் பகிர்வாய்
உணர்வின் வலியை சுடுவாய்
செயலும் சரியாம் திசைசென் றிடவே
திடமும் தெளிவும் திறனும் தரும் தாய் (முருகா..)

அழகே அழகின் ஒளியே
அணுவே அகிலத் திசையே
மொழியின் ஒலியே முதலே முழுதே
முடிவே தொடரும் பிறவி முளையே (முருகா..)

இருதே வியர்கள் தொடர
இறைவர் அமரர் பணிய
திருநல் லையதன் திருநாள் தனிலே
திரளும் அடியார் குறைதீர்த் திடு…வேல் (முருகா..)

15.08.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply