நீல மயிலேறி நீழல் எனமாறி
நீயும் வரும்போது அருகாக
நின்று… நினைக்கண்டு நெஞ்சு நிறை அன்பு
நேர்த்திகளும் தீர்த்து மகிழோமோ?
காலப் பிழையென்று கண்ணும் உணராத
காலன் எமைத்தீண்ட வரும்போது
கட்டி அணைக்காமல் கஷ்டம் களையாமல்
கையை விடல் என்ன சரி தானோ?
நாளும் கடலாக நல்ல அடியார்கள்
நாடும் திருநல்லைப் பதி வாழ்வே
ஞாயம் எது? இன்று நான்கு அடிதள்ளி
ஞானம் பெற நிற்கும் பழி வாழ்வே?
வீழ்த்தி மலம் மூன்றை மாய்த்த வடிவேலை
மீண்டும் எறி நோயின் முதல் மீதே!
வெற்றி விரைவாக மேவ வழிசொல்லு
வெள்ளி மயில்மீது வரும்போதே!
நூறு பகை சூழ்ந்த போதும் நொடியாமல்
நோற்ற விரதங்கள் தவறாது
நோயின் பிடியாலே நூர…தடுமாறி
நொந்த திருத் தொண்டர் நொடி தீரு!
மாறுபடு சூரர் மீள தலைதூக்கி
மண்ணில் எழும்பாமல் அரண்போடு!
வானம் இடியாமல் பாரு! உனை அன்றி
மைந்தர் எமக்கின்று துணை யாரு?
12.08.2020