இடரேதும் தொடராதெம் பொழுதோடணும் –எங்கள்
இரு கண் உன் எழில்முற்றும் நிதம் காணணும்.
கொடுமைகள் தொலைந்தெங்கள் குடி வாழணும்–உந்தன்
குளிர் வேலின் ஒளியில் நாம் முடி சூடணும்!
கடலாக அலைமோதும் திருவீதியில் –கந்தன்
கழல் காண வருவோரின் மனம் பீதியில்
அட எட்டு திசை திக்கும் கொடுநோயினில் –உந்தன்
அருள் ஒன்றே எமைக்காக்கும் வரும் நாளினில்.
கரம் தோய்த்து, இடம்விட்டு, வரவேற்கிறோம் –முகக்
கவசங்கள் உடன் நின்றும் உனைப் போற்றுவோம்
திருநாளில் வரும் உன்னைப் பணிந்தேற்றினோம் –எங்கள்
திசை எட்டும் சுகம் காண உதவென்கிறோம்!
வழமைக்கு குறையாத விழா என்பது –தொற்றின்
வளைப்புக்கு இடை இன்று நடக்கின்றது
களியாட்டம் எதுமில்லை….வரலாறிது –வெளிக்
கடை கண்ணி இ(ல்)லை பக்தி பொலிகின்றது!
உளச் சுத்தம் உடல் ஊரின் உயிர்ச் சுத்தமும் –என்றும்
உலகுக்கு மிகத்தேவை எனும் தத்துவம்
பழக்கத்தில் வரும் காலம்… பலன் தந்திடும் –வேலின்
பளிச்சீடெம் உயிர் அச்சம் தனைக் கொன்றிடும்.
துயரேதும் அணுகாது வழிகாட்டடா –நல்லைத்
துரையே…எம் எதிர்காலம் தெளிவாக்கடா!
உயிர்காத்து அயல்காத்து ஒளி ஊட்ட வா –நாங்கள்
உனை நம்பி இருப்போம் நம் பழி சாய்க்க வா!
11.08.2020