கடவுளா இது?

உயிருள்ள தெனச்சொல்ல முடியாது;
ஏனென்றால்
உயிரின் அடிப்படைக் கலமல்ல இது!
எனினும்
உயிரில்லை எனவுமெண்ண முடியாது;
‘நிறமூர்த்த’
உயிரின் அடிப்பொருளை உள்வைத்த
ஒன்று இது!
கண்ணுக்குத் தெரியாது…அருவமிது;
சிலபோது
விண் மண்ணில் பரவி வியாபிக்கும் இது;
உலகில்
பல்வேறு வடிவெடுக்கும்.
பல்வேறு அளவில் எழும்.
எண்ணற்ற வகையில் மிகும்.
ஒன்றிரண்டாய் இவை…’பிளவில்’
எண்ணற்றுப் பெருகும்.
எங்கெங்கும் வாழும்.
விண்,மண், நீர், நுண் உயிர்கள்,
விலங்கு மனிதரிலும்,
கொஞ்ச மரங்களிலும்,
தூணிலும் துரும்பினிலும்,
வெப்பம் குளிரினிலும்,
வெந்நீர் பனியினிலும்,
உப்பினிலும் அமில கார ஊடகம், உலோகம்,
எங்கும் இருக்கும்!
எவரையும் தேவை எனிற் சேரும்!
“யாரால் பரவுமது” எனச்சொல்ல முடியாது.
நீராலோ காற்றாலோ நெருங்காது
தான் என்றோ….
அதிலே இருந்து இதிலே பரவாது
இது அதன் வழியென்றோ….
எதிர்வு கூற முடியாது!
எவ்விதமும் இது இயங்கும்!
தனைத்தான் ‘உள் உருமாற்றி’
எவ்வாறும் வாழும்!
எவ்விடத்தையும் ஆளும்!
பங்கம் தராது பலநேரம்;
பழிவாங்க
எண்ணில்….தயங்காது விதிபோலும்!
அதை முழுதாய்
விளங்க முடியாது!
வீரியத்தைக் குறைத்தேனும்
அழிக்க இயலாது!
அழிக்க மருந்தேது?
தானாகத் தொற்றின்…தானாய் அகலவிடல்
தான்…அதை வெல்வதற்குத் தக்கவழி;
அருகினிலே
யாரெவரும் அணுகா திருத்தலே தவிர்க்கவழி!
கோடிகோடி ஆண்டு
எண்ணற்ற இதன்குலங்கள்
தானிருந்த போதும்…’அதில்’ ‘பய பக்தியுடன்’
நாமிருந்தால்…என்றுமது
நமக்கு இடர் நல்காது!
நாம் எடுத்தெறிந்து நாமும் கவலையற்று
“யாரென்ன செய்வார் எமக்கு” என்று
கொக்கரித்து
மோத முயன்றவற்றை
முட்டை, ரத்தம், விலங்கில்
சேர்த்து வளர்த்தெம் சுயநலத்திற் காய்ப் பிறரைச்
சாய்த்து விழுத்திவிடப் பாவித்தால்
தனது
வேகம் விவேகத்தை,
வீர விளையாட்டை,
யாரும் தனைத்தடுத்து அழித்துத்
தொலைத்துவிட
ஏலாது என்ற எதார்த்தத்தை அது காட்டும்!
ஒப்பிட்டுப் பார்த்தால்…..
கடவுளுக்கும் இவ் இயல்பு
அப்படியே பொருந்துதெல்லோ!
அப்போ கடவுள்தான்
எம் ‘இல்லறம்’ திருத்த அன்று ‘ hiv ‘ ஆயும்,
எம் ‘சுயநலம்’ திருத்த இன்று ‘corono’ வாயும்.
வந்தாரோ என்றேன்
மனப்பட்சி கேட்கிறது!
கண்முன் தெரியாட்டில் கடவுளில்லை
இங்குஎங்கும்
என்ற கதை தோற்க…
இது அரூபக் கடவுள்போல்
வந்தெங்கும் கடவுள் வசிப்பதையா சொல்கிறது?
எந்தக் கடவுளையும் எமைக்கடந்த சக்தி என்று…
செந்தீபோல் அகலா தணுகாதும் நின்று…
பயம் கொஞ்சம் பக்தி கொஞ்சம்
எனப்பார்த்து…
‘பயபக்தி’ கொண்டழைத்தால் பயன் பெருகும்!
வைரஸைப் போல்
எண்ணித் தனிமனித
சமூக ஒழுங்கு காத்தால்
மண்ணில் கடவுள்களும் வரம் நல்கும்;
இல்லாட்டில்
மண்ணைத் திருத்தவந்த வைரஸ் போல்
இறை வதைக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply