உலகம் முழுவதும் ஒரேநேரம் சிறையிருக்கும்.
உலகம் முழுதும் ஒரேசமயம் தனித்திருக்கும்.
உலகம் முழுவதும்
ஒரேநேரம் பயந்திருக்கும்.
உலகம் முழுதும்
ஒரேசமயம் நேர்ந்திருக்கும்.
உலகம் முழுவதும் ஒரேநேரம்
நோன்பிருக்கும்.
உலகம் முழுதும் ஒரேசமயம்
பசித்திருக்கும்.
இத்தனை காலத்தில் இப்படிமுழுப்
புவியும் இடர்
முற்றி…முழித்து முடங்கி
ஓர் மனநிலையில்
சுற்றியது இல்லை!
தொடர்ந்து எண் திசையும்… சா
பற்றி எரிந்ததில்லை!
ஒரு பகுதி அழிய
வெற்றியென மறுபக்கம் துள்ளிக்
குதித்ததுபோய்
இப்படியோர் சோகம் முதல் இரண்டாம்
உலகமகா
யுத்தத்தில் கூடத் தோன்றி இருந்ததில்லை!
கடைசியாய்த் தஞ்சமுறும்
கடவுளரின் ஆலயங்கள்
அடைத்தன கதவம்…
அனைத்துலகில் இந்நாளில்!
கடவுளரும் கையா லாகா தடங்கினரா?
கடவுளரும் தம்மைக் காக்கத்
தனித்தனரா?
இல்லை…உலகிலுள்ள எல்லாக் கடவுளரும்
‘மல்லுக்கு நிற்கும்’ மனம் விட்டு
ஒன்றுசேர்ந்து
பேதம் பெருக்கித் தம்மை வைத்துப் பிழைத்த…,
நாளும் தம் சொல்லைக் கேட்டு அடங்காத…,
தேவைக்கு ஏற்ப தமைக் கட்டி அவிழ்க்கின்ற…,
மானிடர்கள் பாடம் படிக்க…
ஊமை ஆகினரா ?
“தம்நோய்க்குத் தாமே மருந்தாக வேணும்”
எனும்
உண்மை உணரட்டும் உலகமென்றா
காலம் அதும்
இந்நாளைப் பரிசளித்து
எமைச் சோதனை எலிகள்
என்றாக்கி…எவ் வரம் சாபம் தர
உலகை
இன்று தவமியற்ற வைத்து
இரசித்துளது?