தொண்ட மானாற்றின் ஓரம்
சுரந்தது கருணை மையம்.
பண்டைநாள் முதலாய் மாந்தர்
உடற் பசி யோடு …ஆன்ம
வன்பசி தணிக்கும் ஸ்தானம்.
வாய்கட்டி, மனதால் போற்றி,
அன்பூற அழைத்தால் போதும்…
அடி முடி காட்டும் வேலும்!
சந்நதி எங்கள் மண்ணின்
தனித்துவ வழிபாட் டிற்கு
முன்னுதா ரணமாம்! ஈழ
முதுசத்தின் ஞான வேராம்!
இன்ன ஆகமத்தால் இவ்வா(று)
இறைவனை அணுக வேணும்
என்றிடும் விதிகள் மாற்றி
இறை நேரில் உலவும் ஊராம்!
மூலஸ் தானத்தில், ஆங்கே
முதிர்ந்த பூவரசின் கீழில்,
வீதி வெண் மணலில், சூழும்
விருட்சத்தின் நிழலில், ஆற்றில்,
வேலன் வந்தெளிய னாக
விரைந்து நின் பசிகள் தீர்ப்பான்!
ஆறுதல் தருவான்! நேர்ந்து
அமர்; இடர் சாய்ப்பான்…காப்பான்!