பாயில் புரண்டு படுக்குது –நேரம்
பகலும் இரவும் வீணாகுது –திருக்
கோயில் கதவும் அடைத்தது –இராக்
கோழியும் கூவ மறந்தது –மனம்
நாயாய் அறைக்குள் அலையுது –ஒரு
நடை வெளிச்செல்ல விரும்புது –புவி
நோயில் விழுந்து நொடிவதால் –வாழ்வு
நோன்பில் தனித்துத் தவிக்குது!
யாரெவர் செய்த விதி, பழி –நரர்
யாருக்குச் செய்த கொடும் இடர் –எவர்
ஊரை உலகை ஒழித்திட –எப்போ
உருவாக்கினார் இத் துயர் வழி –அறம்
பாவம் மறந்து சுயநலம் –பண்டைப்
பண்பை மறந்த இழிநிலை –இன்று
பாரே இடருள் ஒடுங்கிற்று –பிழைப்
பாதையால் துன்பம் தொடருது!
மாதமொன்று ஆன பின்னரே –பல
மடங்கு இறப்பு இழப்புகள் –மன
வேதனை கூட்டி வெருட்டுதே –நாளை
மேலும் முற் காப்புக்கு ஏங்குதே –பிணி
சாதி மதம் பாரா தாட்டுதே –விழும்
சாவெண்ணில் …நெஞ்சம் நடுங்குதே –எம
தூதராய்த் தொற்றும் கிருமிகள் –எங்கள்
சுயநலம் மாற்ற முயலுதே!
தொற்றிப் பரவத் தடுத்துடன் –நோய்
தொலையத் தனித்துத் தொடர்பற்று –நாம்
சற்று அடங்கி இருக்கணும் –இல்லை
சாவை நெருங்கி அணைக்கணும் –பல
கற்றிட வைத்ததிக் காலமும் –எங்கள்
கண்ணைத் திறந்தது வைரசும் –இன்று
முற்றாய் முடங்கிற் றுலகமும் –இதன்
மூலம் திருந்துமா உள்ளமும்?