என்னாகும் நாளை… இன் றெவர்தான் தேர்ந்தோம்?
எது எதுதான் நடக்குமென எவர்தான் காண்போம் ?
இன்று சூழும் அவலமுகில் கலைந்தா ஓடும்?
இல்லை பெரும் அழிவு மாரி அடித்தா ஓயும்?
இன்றைக்கிவ் எச்சரிக்கை எமையா காக்கும்?
இல்லை பேர் இடராகி எமையா மாய்க்கும்?
இன்றைய நம் துயர் வளர்ந்தெம் தலையா கேட்கும்?
இல்லை பெட்டிப் பாம்பாயா அடங்கிப் போகும்?
யாரறிவார் நாளை என்ன ஆகும் என்று?
யாருரைப்பார் நாளை என்ன நடக்கும் என்று?
“ஏதும் நடவாதென்று” எண்ண …கொத்தாய்
இறப்பெழலாம்! “இறப்பெழுமாம் எங்கும்” என்று
பார்த்திருந்தால்…கால நிலை, சூழல் வெப்பம்
பழிவாங்க; வந்த வைரஸ் பாடை ஏறிப்
போகலாம்! ஆம் எது நடக்கும் யார் தான் உண்மை
புகல்வர்? எந்த ஜோசியர்கள் நிஜத்தைச் சொல்வார்?
நாளை என்ன நடக்குமென நூறு வீதம்
நாம் சரியாய்ச் சொல்லும் ஆற்றல் இல்லாப் போதும்,
தூர திருஷ்டியாலே எதிர் காலத்தை…அச்
சொட்டாக யாரெவரும் கணிக்காப் போதும்,
நாளை எதும் நிகழும் எனும் ஐயம் அச்சம்
நம் மனதைக் கறையானாய் அரிக்கும் மட்டும்,
நாம் தோற்போம் எதிலும்! விஞ் ஞானம் நுட்பம்
நமைக்காக்கும் என நம்பி என்ன ஆவோம்?
நாளை என்ன நடக்கும் எனும் புதிரும் …இன்று
அவிழாமல் …நாளைதான் அவிழும் என்றால்,
சோதிடம், ஆரூடமதும், எதிர்வு கூறும்
சுத்துமாத்தும், மந்திரமும், தந்தி ரமும்
வாழும்! பொய்ப் புனைவு ஆழும்! அதிஷ்டம் பார்க்கும்
சீட்டு சூது ஏமாற்று நீளும் இங்கு!
நாளைப் புதிர் இன்றவிழாப் பொழுது …தெய்வ
நம்பிக்கை அழியாது சூழ…. வேண்டு!