ஏனின்னும் நாங்கள் எதிலும் அலட்சியமாய்,
ஏனின்னும் நாங்கள்
எதிலும் அசட்டையாய்,
ஏனின்னும் நாங்கள் எதையும் புரியாது,
ஏனின்னும் நாங்கள் எதற்கும் பயப்படாது,
அஞ்சுதல் அஞ்சாமை பேதமை
என் றறியாது,
கெஞ்சி…’விளங்கியவர்’ கேட்க
செவிகொடாது,
யாரோடு பொருதுகிறோம்?
உயிரை இழக் காதிருக்க
யாது வழி என்றுரைக்கும் யதார்த்தத்தை
‘உசார் மடையர்’
போல்…. தூக்கிக் கடாசிவிட்டு
வழமையினைப் போலெல்லோ
நாம் நினைத்த வாறு நடந்து தொலைகின்றோம்!
என்ன நமைச்சூழ
இருக்குதெனத் தெளிந்தோமா?
இன்றையபோர் எது என்று ணர்ந்தோமா?
நம் கண்முன்
குண்டு தெரிகிறதா?
கோல்சர் தெரிகிறதா?
‘அந்த உடை’ துப்பாக்கி அது அவர் இவரென்று
ஏதும் புரிகிறதா?
ஹெலி, செல், பீரங்கி,
வானூர்தி கிபிர் அருகில் வருகிறதா?
இப்பக்கம்
ஆபத்து என அகன்று,
அவசரமாய்க் குழி புகுந்து,
ஏதுமொரு வேட்டயலில் கேட்க
நொந்திடம்பெயர்ந்து,
ஆம் ஊரை விட்டே அகன்று,
எமைப் பாதுகாக்கும்
போர்க்களமா நீளுதின்று?
கட்புலனுக் கெட்டாத
நோய்க்கிருமி;
கண்டங்கள் தாண்டி நரர் காவி வந்த
பேய்க்கிருமி;
யாரினிலும் பேய் தொற்றல் போல் தொற்றி
யாரில் பரவுமென்று
யாம் அறியா மாக்கிருமி
ஏதும் பொருள் உலோகம் தனில் இருந்து
அதைத்தொட்டால்,
காவுவோர் கை கால் பட்டால்,
அவர் எச்சில் இருமல் தும்மல்
ஓர் துளி தெறித்தால்,
ஒருவருக்கும் தெரியாமல்
தொற்றி தொற்றியோரைத் தொட்ட
மற்றவரில் தொற்றிப்
பற்றும் பழி வினைபோல்,
பாவ விதிப் பயன்போல்,
சற்றும் ஈ விரக்கமற்று
சாகடிக்கும் சாக்கிருமி;
தூர திருஷ்டி, ஞானம், அறிவு,
மந்திரம், மருந்து,
ஏதேனும் தந்திரம், சுகமளித்தல்,
தீட்சைகளால்
வீழ்த்த முடியாத விஸ்வரூப
தீ நுண்மி;
தொற்றிச் சிலநாளின் பின்தான்
அறிகுறிகள்
முற்றி நெருங்கியோரை
முடிக்கும் லோகப் பொது எதிரி;
எங்கும் வதந்திபோல் பரவ
அதைப்பற்றி
சிந்திக்கும் ஆற்றலின்றி…,
தெளிந்தோர்கள் மீள மீள
“மூன்றடியைப் பேணுங்கள்;
முகக்கவசம் அணியுங்கள்;
சேர்ந்தொன்றாய்க் கூடாதீர்;
சும்மா திரியாதீர்;
வீட்டில் இருங்களென்றால்;
வில்லங்கமாய் மீறி…,
காப்பு முறைகளிலே கவனமின்றி…,
எமை அணுகும்
ஆபத்தின் ஆழம் அகல நீளம் புரியாதா
நாமின்னும் உள்ளோம்?
நாம் பேரழிவை ..மீண்டும்
வாசலிலே ‘கும்பம் வைத் தழைப்பதற்கா’
முயல்கின்றோம்?
(தீநுண்மி –வைரஸ் )