மனிதர்களில் அநேகமானோர் மிருகம் போலாய்
வாழ்வதுதான் வழமை! மண்ணில் பிறந்து வந்து
மனிதர்கள் மனிதர்களாய் வாழ்ந்தால் நன்மை!
மனிதர்களில் சிலர் தலைவர் ஆவார் உண்மை!
மனிதர்களில் தலைவரானோர் மக்கள் உய்ய
வழி, வகையைக் காட்டல்..மேன்மை! இதனை விட்டு
மனிதர்களில் தலைவர்களை…. கடவு ளாக்கி
வளர்த்து…எட்டி நின்று …பெற்றோம் கோடி தீமை!
கடவுளர்கள் கருவறையில் உறைந்து ஊரைக்
காக்கவேண்டும்; மனங்களுக்குச் சாந்தி தந்தும்
துடக்குகளைப் போக்கவேண்டும்; தலைவர் என்போர்
துணிந்து தெரு இறங்கி மக்கள் துயர்கள் தம்மை
துடைக்கவேண்டும்; வழிதவறும் சமூகம் தன்னை
தொடர்ந்து நெறிப்படுத்தவேண்டும்; உயர்ச்சி எங்கும்
கிடைப்பதற்கு உழைக்கவேண்டும்; கடவுள் என்று
கீதைசொல்லித் தலைவர் வந்தால்…தொலைவோம் யாண்டும்!
தலைவன் தன் மக்களினைச் சமமாய்ப் பார்த்து,
சாதி, மத, மொழி, இனத்தின் பேதம் தீர்த்து,
விலைபோகாதும் நிமிர்ந்து, தனது கொற்ற
விழுமியத்தை; வரலாற்றின் புகழைக் காத்து,
‘நிலை’ உயர வைத்து, தூர திருஷ்டி யோடு
நிம்மதிக்காய் நேர்ந்து, ஆள்தல் நியாயம்! எங்கள்
தலைவர்கள் தலைவர்களாய்ச் சிறந்தால் போதும்!
தன் பணியைக் கடவுள் பார்ப்பார்…உயரும் நாடும்!