பாவிகள் நோய்க் காவிகளாய் மாறி னார்…அப்
பாவிகளும் காவிகளாய் மாறு கின்றார்!
பாவமெது செய்தார்? மெய் தழுவித் தொட்டு
பயங்கரத்தைப் பவ்வியமாய் வாங்கிக் கொண்டார்!
ஏவ எவர் மீதினிலும் இறங்கும் பேயாய்
எண்திக்கும் பரவுகிற கிருமி தொற்றி…
காவிகளால் காவிகளும் கலங்கி நிற்கும்.
கடல் கடந்து ஊருலகம் சுடு காடாகும்!
சாதி நிறம் மதம் இனம் எவ் மொழியும் பாரா
சாத்தானாய்த் தொற்றுகிற துயரம் …இன்று
பேதங்கள் பாராமல் உயிரைத் தின்னும்;
பெரியரையும் சிறியரையும் சமனாய் உண்ணும்;
மேதமைகள் அறிவாற்றல் நவீன நுட்பம்
வெருண்டு கண்டு கதிகலங்கும்; காலச் சீற்றம்
தோதான வழி தொற்றும். கொடிய இந்தத்
துயர் வெல்ல எவ்வழி நாம் காணப் போறம்?
கைகூப்பி வணங்கல் , துடக்கென்று கை கால்
கழுவல், எனும் எம்வழியைப் புவி பின் பற்ற…
கைகுலுக்க வருபவரைக் கண்டே ஓடி
கலவரமாய் நாகரீகம் முழித்து வாட…
வையம் முழுதுக்கும் இன்று வந்த துன்பம்
மனதின் ஏற்ற தாழ்வுகளைக் கேலி செய்ய…
மெய் உணர்த்த இயற்கை இன்று தந்த நோயை
வென்றெலோரும் ஒன்று என வாழ்வோம் உய்ய!